அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சிறப்பாக விளையாடி 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
11-வது அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகள் (ஜூடோ, டேக்வாண்டோ, வுஷு, பென்காக் சிலாட் மற்றும் கராத்தே) ஹைதராபாத்தில் கடந்த ஜூலை 23 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றன.
இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 67 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 13 பதக்கங்களை தமிழக காவல்துறை அணி கைப்பற்றியது.
பதக்கம் வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநரும், காவல் படைத் தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ்., பாராட்டு தெரிவித்து, அவர்களின் சாதனையை ஊக்கப்படுத்தினார்.
திறமை, கடின உழைப்பு மற்றும் விளையாட்டு ஆர்வத்தின் மூலம் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் தேசிய அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

