“புகார் மேகம் சூழ… பதிவுத்துறையில் மாற்ற மழை பொழிய!”
பதிவுப் பணியில் இருந்த அதிகாரிகள் நிர்வாகம், வழிகாட்டி பிரிவுகளுக்கு மாற்றம்

பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, பதிவுத்துறையில் பணியாற்றி வந்த 21 சார் பதிவாளர்களை பதிவு அல்லாத பணிகளுக்கு மாற்றி பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத்துறையில் பணிபுரியும் அலுவலர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவு பணியில் இருந்து நிர்வாகம் உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நத்தம் (திண்டுக்கல்) சார் பதிவாளர் ஆர். மாசரணம் அரியலூர் சார் பதிவாளர் (நிர்வாகம்) பணிக்கும், மணலூர்பேட்டை (விழுப்புரம்) சார் பதிவாளர் எஸ். சந்திரசேகர் திருச்சி துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பழனி கீரனூர் சார் பதிவாளர் பி. மூர்த்தி திருநெல்வேலி அலுவலகத்திற்கும், கோவை பீளமேடு சார் பதிவாளர் எஸ். சுரேந்திரக்குமார் சேலம் அலுவலகத்திற்கும், சேலம் அயோத்தியாப்பட்டணம் சார் பதிவாளர் எஸ். கோகுல்ராஜ் கோவை அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருப்பத்தூர், திருவள்ளூர், கரூர், திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய 21 சார் பதிவாளர்களும் நிர்வாகம் மற்றும் வழிகாட்டி பிரிவு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி பணியிட மாற்ற நடவடிக்கை, துறையை சீரமைக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

