ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால், மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பட்டத்துநாயக்கன் பட்டியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பயிலும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்காமல் இருப்பதுடன், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதிலும் சிரமம் ஏற்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தனலட்சுமியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, “கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. கட்டிடத்தின் முன்புறம் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு மண் அடிக்க வேண்டும். இதுகுறித்து ஊரில் பேசி முடிவு செய்து மண் அடித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரசு நிதியில் கட்டப்பட்ட பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனை பொதுமக்களிடம் ஒப்படைப்பது சரியான நடைமுறையா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அழகுபட்டி பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் அமைப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகுபட்டி ஊராட்சி செயலாளர் தனலட்சுமி, சில்வார்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அழகுபட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக அதே பகுதியில் பணியாற்றி வருவதாகவும், இவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து, அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சில்வார்பட்டி அங்கன்வாடி கட்டிடங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

