சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஈஷா அறக்கட்டளை மூலம் கைலாய மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திபெத்தின் கியிரோங் (Gyirong) எல்லைப் பகுதியில் உள்ள குடிவரவு மையத்தில் பயண ஆவணங்கள் சரிபார்ப்புக்காக காத்திருந்தபோது திடீரென வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஈஷா அறக்கட்டளையின் 21 யாத்திரை குழுக்களைச் சேர்ந்த 77 முதல் 80 பேர் வரை கியிரோங் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், பாதிக்கப்பட்ட யாத்ரீகர்களின் குடும்பத்தினரின் கவலையை பகிர்ந்து கொண்டதுடன், அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

