தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சீ.ரமேஷ் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அத்துறையின் அமைச்சர் சீ.ரமேஷ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக “திருக்கோயில் பணியாளர் தேர்வு வாரியம்” அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேரடி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை
திருக்கோயில்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் இனி முறையான தேர்வு நடைமுறைகள் மூலம் நிரப்பப்படும். தகுதியான நபர்களுக்கு வெளிப்படையான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த வாரியம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்
ஆண்டுதோறும் 10 ஆயிரம் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் மூலம் முக்கிய திருக்கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வெற்றி கலை அறிவுசார் திருக்கோயில் பயணம்’
கோயில்களின் வரலாறு, சிற்பக்கலை, கட்டடக்கலை, கல்வெட்டுகள் மற்றும் ஓவியக் கலைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதற்கட்டமாக 2 ஆயிரம் பக்தர்களுக்கு சிறப்பு அறிவுசார் ஆன்மிக சுற்றுலா நடத்தப்படும்.
சித்தர்கள் விழா மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தர்களின் மாதம் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படும்.
மேலும், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று திருநாவுக்கரசரின் சைவத் தொண்டு மற்றும் தமிழ்ப் பணியை போற்றும் வகையில் இசை, சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கிராம தெய்வக் கலைவிழா
கிராமப்புற பெண் தெய்வம் மற்றும் காவல் தெய்வ வழிபாட்டு முறைகள், கலைப் பண்பாடுகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து மண்டலங்களிலும் கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் ‘கிராம தெய்வக் கலைவிழா’ ஆண்டுதோறும் நடத்தப்படும்.
அறுபடை வீடுகள் மேம்பாடு
முருகப்பெருமானின் அறுபடை வீடு திருக்கோயில்களை முன்மாதிரி திருக்கோயில்களாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு கட்டமைப்பு மேம்பாடு
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- பழனி தண்டாயுதபாணி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.3.10 கோடி செலவில் 9 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.
- மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கலையரங்கம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்கப்படும்.
- அழகர்கோவில் சுந்தர்ராசா மேல்நிலைப் பள்ளியில் ரூ.87 லட்சம் மதிப்பில் குடிநீர் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறைகள் மற்றும் நவீன சமையற்கூடம் அமைக்கப்படும்.
மேலும், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கோயில்களில் பொது விருந்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம், பணியாளர் நியமனம், ஆன்மிக சுற்றுலா மற்றும் கல்வி நிறுவன மேம்பாடு என இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

