திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புதிய பாதாள சாக்கடை இணைப்புக்காக சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், ஒப்பந்ததாரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்ததாரர் தங்கராசு என்பவர் பொதுமக்களிடம் பணம் பெற்றதாக, திருப்பூர் நுகர்வோர் முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், முதல்வரின் முகவரியில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாநகராட்சி இளநிலை பொறியாளர் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், பாதாள சாக்கடை இணைப்புக்காக பொதுமக்களிடம் ஒப்பந்ததாரர் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் தங்கராசு மீது திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு, சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கான உத்தரவை திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையாளர் பிறப்பித்துள்ளார். இதன் நகல்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் இணையவழி தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

