திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தெருநாய்கள் மற்றும் விலங்குகளின் நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அவிநாசி வட்டத்தைச் சேர்ந்த வி. உஷா தலைமையில் சரிதா, சசிகலா, கார்த்திகேயனி, கவிதா, ஜெகதாம்பாள், சீனிவாசன், ராஜா உள்ளிட்ட விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் இந்த மனு அளிக்கப்பட்டது.
அதில், திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விலங்கு நல ஆர்வலர்கள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், விலங்குகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை சட்டரீதியாக அணுகி அவற்றின் துயரைப் போக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கத்துடன் இணைந்தும் பணியாற்றி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது விலங்கு நலன் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் சார்பில் செயல்படும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் செயல்பாடுகள் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களுக்கு உணவு அளிப்பதுடன், நோய்வாய்ப்படும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில் விலங்கு நல ஆர்வலர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், கால்நடை மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருந்துகள் இல்லாத நிலையை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட கருவிகள் இருந்தும் அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் சிகிச்சை தாமதமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்களால் பராமரிக்கப்படும் தெருநாய்களை, பிறப்பு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி பிடித்துச் செல்வதாகவும், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் மற்றும் தகுதியற்ற குட்டி நாய்களும் பிடிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் நாய்கள் மீண்டும் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே முறையாக விடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் அருகே அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் நாய்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில், எஸ்.பி.சி.ஏ. (SPCA) உறுப்பினர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கெனவே கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் பிடிப்பது தவிர்க்கப்படுவதுடன், பிடிக்கப்பட்ட நாய்களை அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே முறையாக விடுவதற்கும் வழிவகுக்கும் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறிய அளவில் தெருநாய்கள் காப்பகங்களை அமைத்து பராமரித்து வரும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

