வருவாய் குறைவு என்பதால் பேருந்து இயக்கம் குறைப்பு: கிராமப்புற மக்கள் பாதிக்கப்படும் அபாயம்
அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்து சேவைகளை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கல்வி, மருத்துவம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவை அரசின் அடிப்படை சேவைத் துறைகள். இவை வெறும் லாப, நஷ்ட கணக்கில் பார்க்கப்பட வேண்டியவை அல்ல என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில், வருவாய் குறைவு காரணமாக அரசுப் பேருந்து சேவைகள் குறைக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்ற விவாதம் எழுந்துள்ளது.
- டீசல் செலவு குறைப்பு… மக்கள் சிரமம் அதிகரிப்பா?
போக்குவரத்து குறைவாக உள்ள நாட்கள் மற்றும் வருவாய் குறைவாக கிடைக்கும் வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை மறுசீரமைக்க போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில புறநகர் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருவாய் இழப்பை குறைத்து, டீசல் செலவை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கிராமப்புற மக்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை செல்லும் முதியவர்கள், தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
- பொதுப்போக்குவரத்து லாபத்திற்கானதா?
அரசுப் பேருந்துகள் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய இணைப்பாக உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் பலருக்கு அரசு பேருந்துகளே ஒரே போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது.
எனவே, பொதுப்போக்குவரத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மட்டும் அணுகாமல், மக்கள் சேவையாக அரசு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- மக்கள் சேவைக்கு நிதி இல்லை… சலுகைகளுக்கு நிதி உள்ளதா?
இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகைகள் குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளுக்கான வாகனம், அதன் பராமரிப்பு செலவு, உதவியாளர் மற்றும் ஓட்டுநர் சம்பளம் உள்ளிட்ட வசதிகளுக்கு அரசு நிதி ஒதுக்கும் நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் அரசுப் பேருந்து சேவைகளை குறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
“அடிப்படை வசதிகளான போக்குவரத்துக்கு நிதி பற்றாக்குறை என்று கூறும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கான கூடுதல் சலுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமா?” என பொதுமக்கள் கேட்கின்றனர்.
அரசுப் போக்குவரத்து என்பது சாதாரண பயண வசதி மட்டுமல்ல; அது ஏழை, நடுத்தர மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகளுடன் நேரடியாக தொடர்புடையது.
எனவே, வருவாய் கணக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பேருந்து சேவைகளை குறைப்பதற்கு பதிலாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கான செலவுகளை மறுபரிசீலனை செய்து, அந்த நிதியை பொதுமக்கள் பயன்பெறும் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

