அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக வெளியிடப்பட்ட நடவடிக்கை உத்தரவை கல்லூரிக் கல்வித்துறை திரும்பப் பெற்றுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரிக் கல்வித்துறை சார்பில் கடந்த 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு மாணவர்களின் ஜனநாயக உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் மீது தேவையற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அச்சமும் எழுந்தது.
இந்நிலையில், கல்லூரிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட புதிய கடிதத்தில், ஏற்கெனவே அனுப்பப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் வெளியிடப்பட்ட உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கல்லூரிக் கல்வித்துறை தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

