திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கௌமார மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கௌமார மடத்தின் சொத்துகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த ஆக்கிரமிப்பு புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அறநிலையத்துறைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மனுவில், பழனி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கௌமார மடத்துக்குச் சொந்தமான மதிப்புமிக்க சொத்துகள், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பான நிலவரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, பழனி பகுதியில் கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் அதனைச் சார்ந்த மடங்களின் நில விவகாரங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

