திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சமூக மருத்துவ சேவை நிகழ்வாக, டிரஸ்ட் ஆஃப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஃபார் பீப்பிள் வெல்ஃபேர் அண்ட் டெவலப்மெண்ட் (IFPWD) மற்றும் சிக்ஸ் சிக்மா ஹெல்த்கேர் இணைந்து நடத்திய “மக்கள் நலப் பயணம்” சமூக நலத் திட்ட தொடக்க விழா மற்றும் மாபெரும் பல்துறை இலவச மருத்துவ முகாம் திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பிரதீப் பரத்வாஜ், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன், தேசிய பட்டியல் இன ஆணையத்தின் (NCSC) இயக்குநர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், Areness நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் சாகர் அகர்வால், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் மற்றும் சமூக நலத் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
இந்த மாபெரும் மருத்துவ முகாமின் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ஆய்வக பரிசோதனை, கண், பல், இதய, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் மற்றும் இலவச மருந்துகளை பெற்றனர்.
மேலும், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேளாமை கருவிகள், சக்கர நாற்காலிகள், அரிசி மூட்டைகள், மளிகைப் பொருட்கள், சேலைகள் மற்றும் வேட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ முகாமில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிறுவனங்களுடன் பல்வேறு மருத்துவ மற்றும் சமூக நல அமைப்புகளும் பங்கேற்றன.
மேலும், 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கினர். இவ்வளவு பெரிய அளவில் மருத்துவ நிபுணர்கள் ஒரே இடத்தில் இணைந்து சேவையாற்றிய நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

