விண்வெளிக்குச் செல்லும் காலத்தில், மின் இணைப்புக்கு 2 வருஷமா வெயிட்டிங்! சிவகாசி அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை!
“டிஜிட்டல் இந்தியா”, “வல்லரசு இந்தியா” என நாடே ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெள்ளூர் அம்மன் கோவில்பட்டி கிராமத்திலோ அதிகாரிகள் ‘டைம் டிராவல்’ செய்து கற்காலத்திற்கே மக்களைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார்கள்!

சின்டெக்ஸ் தொட்டி இருக்கு… ஆனா மின்சாரம் இல்லையாம்!
இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ‘சின்டெக்ஸ்’ குடிநீர் தொட்டி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. ஆனால், என்ன பிரயோஜனம்? அந்தத் தொட்டிக்கு மின் இணைப்பும் (EB Connection) இல்லை, மீட்டர் பெட்டியும் இல்லை! விளக்கு இல்லாத காரை வாங்கி வீட்டின் முன்னாடி நிறுத்தி அழகு பார்ப்பது போல, தண்ணீரே இல்லாத தொட்டியை இரண்டு வருடங்களாக மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். “தொட்டி இருக்கு… ஆனா அதுல தண்ணி வராது” என்கிற வடிவேலுவின் கிணற்றைக் காணோம் காமெடி பாணியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொட்டி எந்தப் பயனும் இன்றி ‘ஷோ பீஸ்’ ஆகக் காட்சியளிக்கிறது.
தண்ணீருக்காக ‘வாக்கிங்’ போகும் பொதுமக்கள்!
முக்கிய குடிநீர் ஆதாரம் இப்படி முடங்கிக் கிடப்பதால், அப்பகுதி மக்கள் தினமும் தண்ணீருக்காகக் குடங்களைத் தூக்கிக்கொண்டு கிலோமீட்டர் கணக்கில் ‘வாக்கிங்’ மற்றும் ‘ரன்னிங்’ போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உடற்பயிற்சிக்கு அரசு முக்கியத்துவம் தருகிறதோ இல்லையோ, அதிகாரிகள் தங்களின் அலட்சியத்தால் மக்களுக்கு நல்ல ‘கனத்த’ உடற்பயிற்சியை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.
தூங்கும் அதிகாரிகள் விழிப்பார்களா?
இதுகுறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் (MLA), மாவட்ட ஆட்சியருக்கும் இன்னும் தகவல் எட்டவில்லையா? அல்லது ‘எல்லாம் நன்மைகே’ என்று அமைதியாக இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, ‘எங்கள் தமிழ்நாடு பேரியக்கம்’ அமைப்பும் அதிகாரிகளுக்குத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
நமது கேள்வி என்னவென்றால்: ஒரு மின் இணைப்பைக் கொடுத்து, மீட்டர் பெட்டியை மாட்டுவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் என்று அதிகாரிகள் ‘பஞ்சாங்கம்’ பார்த்துச் சொன்னால், மக்கள் அதுவரை தாகத்தைப் பொறுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்!
அதிகார வர்க்கம் இனியாவது கும்பகர்ண தூக்கத்தைக் கலைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால், மக்கள் குடங்களுடன் அதிகாரிகளின் அலுவலகங்களை முற்றுகையிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!

