தமிழக முதல்வர் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ள ‘முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தையொட்டி, பழனி அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மகப்பேறு வார்டுக்குச் சென்ற ஆட்சியர், சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கான அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம் அமைப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
புதிய கட்டிடங்களில் நடைபெற்று வரும் லிஃப்ட் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், மருத்துவமனை வசதிகளை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முதல்வரின் புதிய திட்டம் தொடங்க உள்ள நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

