பழனி ராமகிருஷ்ணா விடுதியில் செயல்பட்டு வரும் மனநலக் காப்பகத்தில் உள்ள செல்லமுத்து அறக்கட்டளையை வெளியேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
செப். 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு, ரெனகாளியம்மன் கோவில் அருகே உள்ள ராமகிருஷ்ணா விடுதி முன்பு போராட்டம் தொடங்கும் என சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பழனி தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராமகிருஷ்ணா விடுதியில் மனநலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. தேவஸ்தான ஊழியர்களுக்கு மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக பயிற்சி அளிப்பதற்காக மதுரையைச் சேர்ந்த செல்லமுத்து அறக்கட்டளையுடன் தேவஸ்தான நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, நிலக்கோட்டையில் இருந்து 50 மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து, அவர்களை பராமரிப்பதன் மூலம் தேவஸ்தான ஊழியர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்களை மீண்டும் அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் காப்பகத்திலேயே இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
100 பேர் தங்கும் வசதி கொண்ட காப்பகத்தில் தற்போது 90-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிக்கப்பட்டு வருவதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பழனியில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளை காப்பகத்தில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தினர் கூறுகின்றனர்.
எனவே, செல்லமுத்து அறக்கட்டளையைச் சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகளை வேறு பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச் செயலாளர் எஸ். பகத்சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் திரளாக பங்கேற்குமாறு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

