திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெருமாப்பட்டு கிராமத்தில் இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா, உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு:
முதல் நாளில் பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வியின் முக்கியத்துவம், சாலைப் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், கைப்பேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடக விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம், பேச்சு, பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்தனர்.இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிராம மக்களுக்கு விழிப்புணர்வு:
இரண்டாம் நாளில் பெருமாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகாதேவராஜ், ஊராட்சி செயலர் அருள், மக்கள் நலப் பணியாளர் பழனி, இளைஞரணி தலைவர் ராஜேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில் கல்வியின் முக்கியத்துவம், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வேளாண்மை மற்றும் கல்விக்கான மத்திய அரசு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா, உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களின் சமூகப் பங்களிப்பை கிராம மக்கள் பாராட்டினர். இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

