அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா–இயற்கை மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமுறை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
ரூ.10 லட்சத்தில் நலவாழ்வு மையம்
இதையடுத்து, ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறை நலவாழ்வு மையம் (Holistic Wellness Centre) திறந்து வைக்கப்பட்டது.
இந்த மையத்தில் 16 வகையான இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை மருத்துவ முறையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
செங்கல்பட்டில் 7 முதல் 15 நாள்கள் தங்கி சிகிச்சை
செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (International Institute of Yoga & Naturopathy Medical Science) ‘Rejuvenation Therapy’ எனப்படும் புத்துணர்வு சிகிச்சைத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 7 முதல் 15 நாள்கள் வரை மையத்தில் தங்கி இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெற முடியும். 28 படுக்கைகள் கொண்ட இந்த மையம் உலகத்தரம் வாய்ந்த இந்திய மருத்துவ முறை ஆரோக்கிய மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
இந்த வசதிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், மேற்கண்ட மருத்துவச் சேவைகளுக்கான முன்பதிவை விரைவில் ‘நலம்AI’ Chatbot மூலம் மேற்கொண்டு பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே. ராம்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலர் டாக்டர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் கி. பாலசுப்பிரமணியம், தேர்வுக் குழு செயலர் டாக்டர் கரோலின் டெய்சி ராணி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இணை இயக்குநர் டாக்டர் என். மணவாளன், டாம்கால் பொது மேலாளர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

