வால்பாறை தொகுதியில் போதிய செல்போன் கோபுரங்கள் இல்லாததே தாம் எம்.எல்.ஏ.வாக காரணம் என, சட்டப்பேரவையில் வால்பாறை தொகுதி உறுப்பினர் சுதாகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, வால்பாறை தொகுதியின் தொலைத்தொடர்பு வசதி குறித்து சுதாகர் பேசினார்.
வால்பாறை தொகுதியில் சுமார் 40 தேயிலைத் தோட்டப் பகுதிகளில் போதிய செல்போன் கோபுரங்கள் இல்லாததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொலைத்தொடர்பு வசதியின்றி சிரமப்படுவதாக அவர் தெரிவித்தார். எனவே, அந்தப் பகுதிகளில் புதிய செல்போன் கோபுரங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பின்வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘நல்லவேளை செல்போன் டவர் இல்லை’ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சுதாகர், ‘செல்போன் டவர் இல்லாததால்தான் நான் இன்றைக்கு எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறேன். டவர் இருந்திருந்தால் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களிலேயே நேரத்தைச் செலவிட்டிருப்பார்கள். நான் எம்.எல்.ஏ. ஆகியிருக்க முடியாது’ என்றார்.
அவரது இந்த நகைச்சுவையான பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
எனினும், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதி என்பது அவசரகால தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு முக்கியமானதாக இருப்பதால், 40 தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் செல்போன் கோபுர வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

