குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய கட்டடமான இது மண் சுவர்கள் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டும், ஓடுகள் உடைந்தும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதையடுத்து, புதிய தீயணைப்பு நிலையக் கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசால் ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டடம் அமைய உள்ள பகுதியில் பாறைகள் அதிகளவில் இருப்பதால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணிகள் தொடங்கி சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கட்டுமானப் பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பணிகளை நேரில் ஆய்வு செய்து, காலதாமதத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

