சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் 120 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘மா காவேரி மருத்துவமனை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை, மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் காமாட்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனியார் மருத்துவத் துறையின் பங்களிப்பு முக்கியமானது எனத் தெரிவித்தார். அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை மனிதநேயத்துடன் வழங்குவது மருத்துவ நிறுவனங்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்து, காவேரி மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்க உள்ள மா காவேரி மருத்துவமனையின் பணி சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

