அண்டை நாடான நேபாளத்தை நேற்று புரட்டிப் போட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 160 ஆக உயர்ந்துள்ளது; மேலும் ஆயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம் ஏற்பட என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இமயமலை அடிவாரத்தில் உள்ளது சின்னஞ்சிறு நாடான நேபாளம். இதையொட்டி ஒட்டி உள்ள திபெத் எல்லையில், நேற்று ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தின. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், சீட்டுக்கட்டு சரிவதுபோல், நொடிப் பொழுதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுவரை நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உள்ளது; இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்குச் சென்றனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களின் ஒரு தரப்பினர் பாதுகாப்பாக உள்ளனர். மற்றவர்களின் நிலை தெரியவில்லை.
காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. தொலைபேசி / வாட்ஸ்அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள், உதவிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு தேவையான அனைத்து மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே, இந்த பெரு வெள்ளத்துக்கு என்ன காரணம் என்பதை அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை இமயமலை பிராந்தியத்தில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பனிப் பாறைகள் சரிந்தன. இந்த பனிப்பாறைகள் சரிந்து ஆறுகளை அடைத்துக் கொண்டன. இதனா, ஆறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர பெருவெடிப்பு ஏற்பட்டது பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்துள்ளது.

