தஞ்சை போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதான புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் தஞ்சையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், முதல்வர் விஜய் மற்றும் திரைப்பட நடிகை குறித்து தனிப்பட்ட முறையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பெண்கள் மற்றும் முதல்வர் குறித்து இழிவாகப் பேசியதாக, தவெகவினர் தஞ்சை காவல் துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 4ஆம் தேதி அவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அன்றைய தினமே உதயநிதி விடுவிக்கப்பட்டார்.
அதேநேரம், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தரப்பட்டது. த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் அளித்த புகாரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அடுத்து மாநில மகளிர் ஆணையம், உதயநிதிக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

