தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கை விரல் (eKYC) சரிபார்க்கும் சிறப்பு முகாம், வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கைவிரல் சரிபார்ப்பு மேற்கொள்ளாவிட்டால், ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் தற்போது சுமார் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷனில் பச்சை நிற குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் ரேஷன் அட்டையில் போலியான பெயர்களை சேர்த்தும், போலியான ரேஷன் கார்டுகள் மூலமாகவும் உணவுப்பொருட்கள் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், போலி ரேஷன் கார்டுகள், போலி பெயர்களை கண்டறிந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு சென்று, தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
கடந்த 3 ஆண்டுகளாக கை விரல் (eKYC) சரிபார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக பல கட்ட சிறப்பு முகாமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, eKYC பதிவை 100% நிறைவு செய்யும் பொருட்டு, 29.08.2026 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில், சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதுவரை கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், முகாமை பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கைவிரல் ரேகைப்பதிவை மேற்கொள்ளாதவர்கள், போலி என்று கருதப்பட்டு நீக்கப்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் வரும் 29 அன்று நடைபெறும் முகாமில் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

