மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்துள்ள நிலையில், வரும் 28ஆம் தேதி, முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு எல் நினோ தாக்கம் காரணமாக, பருவமழை பொய்த்தது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்யாமல் ஆறுகள், நீர் நிலைகள் வறண்டன.
காவிரி ஆற்றிலும் நீர் வரத்து குறைந்தது; மொத்த கொள்ளளவு 120 அடி என்றுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் நீர் இருப்பு குறைந்தது. காவிரியில் போதுமான நீர் வரத்து இல்லை; தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப் பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்காததால், வழக்கம் போல் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
ஆனால், கடந்த சில வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. இதனால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய காவிரி நீர் வரத்து நிலவரத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 90 அடியை எட்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, காவிரி நீரை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் விஜய், மேட்டூர் அணைக்கு சென்று காவிரி நீரை பாசனத்துக்கு திறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் வருவார் என்று கூறப்படும் நிலையில், மேட்டூர் அணை பகுதியில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட காவல் துறையினர், மேட்டூர் அணையை பர்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

