தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது எழும் ஊழல், ஒழுங்கீனம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பான புகார்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும், விசாரணை நடத்தவும் இந்தப் பிரிவுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரத்திற்கும் தனித்தனி மொபைல் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகார் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்துள்ளது. மேலும், புகார் அளிப்பவர்கள் மீது எந்தவிதமான மிரட்டல், தொந்தரவு அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்படும் அனைத்து புகார்களும் உரிய காலக்கெடுவுக்குள் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்கப்பட்டு, தவறு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உள்நிலை கண்காணிப்பு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் அல்லது காவல்துறை பணியாளர்களின் தவறான செயல்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் (DGP/HoPF) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

