அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பழனி புலாம்பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி என்பவர், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மீது புகார் அளித்தார்.

அதில், பக்தர்கள் எந்த நேரத்தில் அறை எடுத்தாலும் மறுநாள் காலை 11 மணிக்குள் அறையை காலி செய்யுமாறு சில விடுதி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, பழனி அடிவாரம் காவல் நிலையம் சார்பில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதன்படி,
- அறை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து முழுமையாக 24 மணி நேரம் தங்கும் வசதி வழங்க வேண்டும்.
- சுகாதாரம் மற்றும் விடுதி பராமரிப்பு தரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- அறை வாடகை கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
என விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பழனிக்கு வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

