காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவாச்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குளத்தை பார்வையிட்டு மரக்கன்றுகளையும் நட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப. தலைமை தாங்கினார்.
ஹூண்டாய் மோபிஸ் (Hyundai Mobis) நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவியுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளம் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து மற்றும் வெளியேற்றக் கால்வாய்களை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாக்குதல், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, புனரமைக்கப்பட்ட குளத்தைப் பார்வையிட்டபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்வருவது பாராட்டத்தக்கது என்றும், ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு பணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், “விழாவில் கலந்து கொண்டு கொடியசைத்து சென்று விடும் ஆட்சி இது அல்ல; மக்களோடு களத்தில் இறங்கி பணியாற்றும் அரசு. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து செயல்படுவோம். தமிழ்நாட்டில் 2,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல்லுயிர் வளமும் பாதுகாக்கப்பட்டு, எதிர்கால தலைமுறைக்கு பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் ஊராட்சித் தலைவர் என். ரேகா நரேஷ்குமார், ஹூண்டாய் மோபிஸ் நிறுவன சமூகப் பொறுப்பு பிரிவு தலைவர் ஜி. நரசிம்மன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் தலைவர் எஸ். செந்தூர் பாரி, திருப்பெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.டி. கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இராமமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

