திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிறுபூலுவபட்டி சாலையில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலும் அம்மன் திருமண மண்டபத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள ஆவின் தேநீர் கடைக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கு, பொதுமக்களுக்கு சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு வகையான குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் கொட்டப்படுவதால், அப்பகுதியில் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு குவிந்துள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அங்கிருந்து பரவும் ஈக்கள் அப்பகுதி மக்களுக்கும் தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்தக் குப்பைக் கிடங்கை அகற்றி அப்பகுதியைச் சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

