தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து மனு அளித்து ஆலோசனை நடத்தினர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. ராஜேந்திரன் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் பா. தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தாயுமானவர் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த காலக் குறைபாடுகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் விரைவில் முழுமையாகக் களையப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கூட்டு கொள்முதல் குழுவின் மளிகைப் பொருட்கள் கொள்முதல் மற்றும் ஜே.பி.சி (JPC) ஆகியவற்றில் நிலவி வந்த லஞ்ச லாவண்யங்கள் முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்குச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை பட்ஜெட்டின் போது, துறை மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவலையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
அரசாணை நிலை எண் 25 (நாள்: 05.03.2026)-ன் படி வழங்கப்பட்டுள்ள புதிய ஊதிய அரசாணையில், கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வை அமல்படுத்தி திருத்திய அரசாணையை வெளியிட வேண்டும் எனச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற துறை சார்ந்த நபர் ஒருவர், பொய்ப் புகார்களைப் பரப்பி அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும், இதனால் நேர்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. புகார்கள் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
ரேஷன் பொருட்களின் எடை குறைவு தொடர்பான விவகாரத்தில், உணவுத்துறை அமைச்சருடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவிலேயே இதற்கும் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“துறையில் தவறுகள் செய்யாத ஊழியர்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நேர்மையாகவும் தொய்வின்றியும் உங்கள் பணியைத் தொடருங்கள். நியாயத்தின் பக்கமும் நேர்மையான ஊழியர்களின் பக்கமும் நான் எப்போதும் துணையாக நிற்பேன்.”
என்ற அமைச்சரின் இந்த உறுதிமொழியும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ரேஷன் கடை பணியாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

