“மழை பெய்ஞ்சா ரோடு ஏரியாகும்னு கேள்விப்பட்டிருக்கோம்… ஆனா, துறைமுகமாவே மாறும்னு இப்பதான் பார்க்குறோம்!” – இப்படி ஒரு நூதனமான, அதேசமயம் அதிகாரிகளுக்குச் சுருக் என்று உறைக்கும்படியான புகாரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் முன்பாகச் செல்லும் SNH-381 தேசிய நெடுஞ்சாலையில், மழைக்காலங்களில் 3 முதல் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்குவது காலங்காலமாக நடக்கும் ‘வழக்கமான’ ஒரு திருவிழாவாகவே மாறிவிட்டது.
நேற்று பெய்த லேசான மழைக்கே இந்த ரோடு, சுந்தரபாண்டியன் பட பாணியில் கடலாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் “ரோட்டுல போறோமா… இல்ல ஆத்துல போறோமா?” என்று தெரியாமல் திணறிப் போயுள்ளனர்.
இப்பிரச்சினை குறித்து ‘நீதியின் கண் சமூக நலக்குழு’ தலைவர் நவீன்குமார் மணிவண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. துர்கா மூர்த்தி (இ.ஆ.ப) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அதிகாரிகளின் அலட்சியத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.
“ஏற்கனவே இந்த ரோட்டுல ‘நீச்சல் போட்டி’ நடத்தலாம்னு நாங்க காமெடி பண்ணி மனு கொடுத்தும் அதிகாரிகள் அசரல. இப்போ மக்கள் வேற லெவல்ல யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் கடுப்பான பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு மரண மாஸான கிண்டல் கேள்வியைக் கணையாக வீசியுள்ளனர்:
- மழைநீர் தேங்கும் ஆழம்: சாலையில் தேங்கும் நீரின் ஆழத்தைப் பார்த்தால், அதில் சின்ன சைஸ் படகுகளையே ஓட்டலாம் போலிருக்கிறது.
- மக்களின் ஐயம்: “ஒருவேளை தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து யாருக்கும் தெரியாம தங்கச்சியம்மாபட்டி பகுதியில புதுசா ஏதும் ‘இன்டர்நேஷனல் போர்ட்’ (புதிய துறைமுகம்) கட்ட பிளான் பண்ணுறாங்களோ?” என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
- முன்மாதிரி திட்டம்: மழைநீர் வடிகால் கட்டாமல் இழுத்தடிப்பதைப் பார்த்தால், எதிர்கால துறைமுகத் திட்டத்திற்கான ‘டெமோ’ தான் இந்த தேசிய நெடுஞ்சாலையோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, தங்கச்சியம்மாபட்டி பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் ஏதேனும் ரகசியமாக நடக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்.
அப்படி எந்த திட்டமும் ‘உள்நோக்கத்தோடு’ செய்யப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையாகவே வாழ விடுங்கள்! மழைநீர் தேங்காதபடி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரந்தர வடிகால் வசதி அமைத்துத் தாருங்கள் என அந்த மனுவில் கிண்டலும் ஆதங்கமும் கலந்த கோரிக்கையை நவீன்குமார் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஒட்டன்சத்திரம் மக்கள் கப்பல் வாங்க ரெடியாக வேண்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

