பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயில் மகாமண்டப நுழைவுவாயிலின் உட்புறம் அமைந்துள்ள இரண்டு சிவன் சன்னதிகளில் வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி திங்கள்கிழமை (செப். 7) தொடங்கியது.
2026–2027ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பு எண் 78-ன்படி, சிவன் சன்னதிகளுக்கு உபயத்திருப்பணியாக 89 கிலோ எடையில் வெள்ளித்தகடுகள் பொருத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, கரூரைச் சேர்ந்த ஜி. பத்ரிநயணன், பி. ஹேமலதா, பி. ஹேமந்த், எச். திவ்யா, பி. விக்னேஷ், வி. வைஷ்ணவி, ஜி. விஷ்ணுபிரசாத், வி. சங்கீதா, வி. அஷ்வின் குமார், ஏ. நிகிதா, வி. பிரஜித்குமார் ஆகியோர் உபயமாக வழங்கிய நகாஸ் வேலைப்பாடு செய்யப்பட்ட சுமார் 88.975 கிலோ எடையிலான புதிய வெள்ளித்தகடுகள் சிவன் சன்னதிகளில் பொருத்தப்பட உள்ளன.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் துணை ஆணையர்/சரிபார்ப்பு அலுவலர் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணிகள் தொடங்கின.
நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர் (பொ), மலைக்கோயில் கண்காணிப்பாளர்கள், சர்வசாதகர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

