இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரலாம் என்ற கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக, ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற கனவு பலகாலமாக இருக்கிறது. அதே நேரம், தேவகவுடாவுக்கு பின் தென் மாநிலங்களில் இருந்து ஒருவர், இன்னும் பிரதமராகவில்லை. அதே நேரம், முதல் முயற்சியிலேயே கட்சி தொடங்கி, தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வர் பதவியை பிடித்தார். இதனால் தவெகவினர் பலர், அடுத்த பிரதமர் விஜய்தான் என்று பேசி வருகின்றனர்.
இந்த சூழலில், இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்களின் பட்டியலில் முதல்வர் விஜய், 3ஆம் இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில், 9.2 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார். இதன் மூலம் மம்தா பானர்ஜி (2%), அகிலேஷ் யாதவ் (1.7%), அர்விந்த் கேஜரிவால் (1.2%) உள்ளிட்ட முக்கியத் தேசியத் தலைவர்களை அவர் முந்தியுள்ளார்.
இதுதவிர, இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கச் சிறந்த தலைவர் யார் என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்பில் பலரும் விஜய்யை ஆதரித்துள்ளனர். இதில், ராகுல் காந்திக்கு (29%) அடுத்தபடியாக, 12.2 சதவீத ஆதரவுடன் விஜய் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதில், மம்தா பானர்ஜி (8.5%), கேஜ்ரிவால் (7.5%), அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரை விஜய் முந்தியுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பானது நாடு முழுவதிலும் உள்ள 25,184 நபர்களிடம் நேரடியாக எடுக்கப்பட்ட பேட்டி அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளதாக, சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு, தவெகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

