நடிகராக விஜய் என்று அறியப்பட்டவர், முதல்வரானதும் ஜோசப் விஜய் என்று அழைக்கப்படுவது ஏன் என்பதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் தந்துள்ளார்.
சென்னையில், மிலாது நபியை முன்னிட்டு மத நல்லிணக்க மாநாடு நேற்றிரவு நடைபெற்றது. இதில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: சில மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்து, இறைத்தூதர்களாக வாழ்ந்து, உலகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வார்கள். அந்த வகையில், நபிகள் நாயகம் இறைத்தூதராக விளங்கினார். தனக்கென்று வாழாமல், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் வாழ்ந்தார்.
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அரசும் மக்களுக்கானது; அனைவருக்குமானது. அதனால்தான் ஷாஜகான் இங்கே அமைச்சராக உள்ளார். ஒரு தலித் அமைச்சராகியுள்ளார். குடிசையில் இருந்து கோட்டைக்கு ஒருவர் வருகிறார் என்றால், அதுதான் உண்மையான மாற்றம். பர்வேஸ், ஷாஜகான் போன்றோருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட அதிகாரம் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வர வேண்டும்.
திரையில் விஜய் என்று தோன்றியவர் விஜய்; தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் தன்னை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு வருகிறார். எப்போதும் விஜய், விஜய் என்று சொன்ன கட்சித் தலைவர், வேட்பாளர் தேர்வு அறிவிப்பின்போது தன்னை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டார்.
பிறப்பால் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்பதைச் சொன்னார். எனினும், முதல்வர் எந்த ஜாதி, எந்த மதம் என்று பார்க்காமல், பெண்களும் இளைஞர்களும் அதிகளவில் ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

