வரும் பொங்கல் பண்டிகை முதல், அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்; டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம், 2 நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை வழக்கம்போல் கூடியது. பேரவையில் சவுகார் ஜானகி மறைவுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, வரும் பொங்கல் பண்டிகை முதல், அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு இந்த சலுகைபொருந்தும். இதன்மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் செலவாகும்.
அதேபோல், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கும், திருநங்கைகள் இலவசம் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. முதல்கட்டமாக நகரப்பகுதிகள், மலைப்பகுதிகளில் டவுன்பஸ்கள் மட்டுமின்றி டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் மகளிர் இனி இலவசமாக பயணம் செய்யலாம். இத்திட்டம் அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறுவற்கு, எவ்வித வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலையோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப்பயணம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
அதேபோல், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதே நேரம், சென்னைக்கு மற்றொரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், புதிய இடங்கள் தேர்வு செய்யப்படும். அதற்காக ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

