விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் “நூற்றாண்டு பேசும் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், விருதுநகர் தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இலவச TNPSC பயிற்சி மையத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.
மேலும், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வகையில் “காபி வித் அமைச்சர்” என்ற புதிய மக்கள் தொடர்பு திட்டத்தையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இஸ்திரி பெட்டிகள், குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், பொதுமக்களுக்கு இலவச வேட்டி–சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

