திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தேவாங்கர் மகா ஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் ஆகியவற்றின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 21-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில், கோபுர கலசங்கள் நிறுவுதல், பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், 8.40 மணிக்கு ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 9.20 மணியளவில் ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்துச் சென்றனர். அப்போது வானில் கருடன் வட்டமிட்ட காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டனர்.
“ஓம் சக்தி பராசக்தி” என்ற பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஐ.பெரியசாமிக்கு கோவில் நிர்வாகம் உற்சாக வரவேற்பு
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு கோவில் கமிட்டியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய ஐ.பெரியசாமி,
“சித்தையன்கோட்டைக்கும், திமுகவிற்கும் நீண்ட வரலாறு உண்டு. ஆத்தூர் தொகுதி சித்தையன்கோட்டை மணி செட்டியார் போன்ற முன்னோடிகளால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தால்தான் இன்று அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
1989-ம் ஆண்டு முதல் இன்று வரை சித்தையன்கோட்டை மக்கள், குறிப்பாக கைத்தறி நெசவாளர்களான தேவாங்கர் செட்டியார் சமூகத்தினர் என்மீது காட்டி வரும் அன்பு அளவிட முடியாதது. தேவாங்கர் சமுதாய இளைஞர்களின் அன்புக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன்” என்றார்.
அவரது பேச்சை கேட்ட பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி. எம். பாலச்சந்திரன், சென்னை தேவாங்கர் மகா ஜன சபை தலைவர் வி.தங்கமணி, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. டாக்டர் கே.ஜெயந்த் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு, ஒன்றிய செயலாளர் ராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.முரளிதரன், பேரூராட்சி செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி சௌந்திரபாண்டியன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பான ஏற்பாடுகள்
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக கமிட்டி கௌரவ ஆலோசகர் பி.டி.சந்திரமோகன், தலைவர் பி.டி.கார்த்திகேயன், செயலாளர் சௌண்டீஸ்வரன், பொருளாளர் வி.சண்முகம், ஜாதி நாட்டாமை எஸ்.ராம்குமார் தலைமையிலான விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

