தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நியமன உறுப்பினர் பதவி காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து தருவதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கோரிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலின்றி நியமன முறையில் உறுப்பினர் பதவி வழங்கும் சட்டம் கடந்த 2025ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளி உறுப்பினர்களும், மற்ற உள்ளாட்சிகளில் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரும் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்தின் பதவிக்காலத்துடன் இணைந்ததாகவே இருக்கும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியமன உறுப்பினர்களின் பதவி காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி சிலர் பணம் வசூலித்து ஏமாற்றி வருவதாகவும், இதனால் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே, பதவி நீட்டிப்பு பெற்றுத் தருவதாக கூறி பணம் கேட்கும் நபர்களை நம்பி மாற்றுத்திறனாளிகள் ஏமாறாமல் இருக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

