உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முதன்முறையாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர்.
கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளியில் பயிலும் 30 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மலை ரெயிலில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, குன்னூரில் இருந்து ஊட்டிக்கு அவர்கள் மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். முதன்முறையாக மலை ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் வழிநெடுகிலும் காணப்பட்ட இயற்கைக் காட்சிகள், மலைத் தொடர்கள், தேயிலைத் தோட்டங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
ஊட்டியை சென்றடைந்த பின்னர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டிய நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்து அவர்களை மலை ரெயிலில் அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனத்தின் முயற்சிக்கு சக பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பாராட்டு கிடைத்தது.

