திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகிலுள்ள முத்தையம்பாளையத்தில், 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக் கிடங்கை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமனன் திறந்து வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

தனியார் முயற்சியால் கட்டப்பட்ட இக்கிடங்கின் உரிமையாளர்கள், அதற்கான ஒப்புதல் ஆவணங்களை அமைச்சரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெங்கட்ராமனன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நெல், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து விநியோகிப்பதற்காக, தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்காகவே இத்தகைய கிடங்குகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் குமரவேல், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அன்புராஜா, வட்டாட்சியர் சித்ரா, செயற்பொறியாளர் முருகன் மற்றும் உதவிப் பொறியாளர் ராஜு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

