பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (65), மதுரை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில், கோயில் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நிலம் குறைந்த மதிப்பீட்டில் தனியாருக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்றதாக கூறப்படும் பள்ளி ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் அன்வர்தீன் முக்கிய பங்காற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. நில விற்பனை தொடர்பாக விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்களை ஒருங்கிணைத்தது, ஆவண நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.
கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த அன்வர்தீனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிறையில் இருந்தபோது அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறைத் துறையினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(குறிப்பு: வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.)

