தடுப்புக் காவல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பிறப்பிக்கப்படும் காவல் உத்தரவுகளை ஆய்வு செய்யும் அறிவுரைக் குழுவை மறுசீரமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் செயல்படும் தடுப்புக் காவல் அறிவுரைக் குழுவின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. கலையரசன், வி. பார்த்திபன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மதுரை அறிவுரைக் குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே. கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் என். ஆதிநாதன், ஜி. இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஒருவர் காவலில் வைக்கப்பட்ட பிறகு, அந்தக் காவல் உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதா, அவரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு போதிய காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அறிவுரைக் குழு ஆய்வு செய்யும்.
மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபர் தனது காவல் உத்தரவை எதிர்த்து முறையிடுவதற்கும் சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட நபரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு போதிய காரணங்கள் இல்லை என்று அறிவுரைக் குழு கருதினால், அதுகுறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
இதன் மூலம் தடுப்புக் காவல் உத்தரவுகள் சட்டப்படியான காரணங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை மறுஆய்வு செய்யும் முக்கியப் பொறுப்பு இந்த அறிவுரைக் குழுவுக்கு உள்ளது.

