முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மேசையில் இருப்பதாகக் கூறியுள்ள 3 முக்கிய கோப்புகளை ஒரு வாரத்திற்குள் திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவையில் தவறான தகவல் தெரிவித்ததாகக் கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தமிழக அரசியல் நிலவரம், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
“தைரியம் இருந்தால் கோப்புகளை திறக்க வேண்டும்”
அப்போது பேசிய அவர், “தனது மேசையில் உள்ள 3 கோப்புகளை திறந்தால் பலருக்கு பிரச்சினை ஏற்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள சவாலை ஏற்று, அந்த கோப்புகளை திறந்து பார்க்க வேண்டியதுதானே?” என்றார்.
மேலும், “ஒரு வாரத்திற்குள் அந்த கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவையில் தவறான தகவல் அளித்ததாக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.
சட்டப்பேரவை மரபுகளை பின்பற்ற வேண்டும்
சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து பேசிய துரைமுருகன், “எனது 50 ஆண்டுகால சட்டமன்ற அனுபவத்தில் அவைக்குள் உறவுமுறை கொண்டாடியதில்லை. புதிய உறுப்பினர்கள் சட்டமன்ற விதிகள், பழைய விவாதங்கள் மற்றும் அவை மரபுகளை அறிந்து செயல்பட வேண்டும்” என்றார்.
மேலும், “சட்டப்பேரவையில் கேலி, கிண்டல், பாடல் பாடுவது போன்ற செயல்கள் அவையின் கண்ணியத்துக்கு ஏற்றதல்ல” என்றும் குறிப்பிட்டார்.
உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
அரசின் நிதி செலவினம் குறித்து விமர்சித்த அவர், “நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறிக்கொண்டே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பு தேவையற்றது. ஏற்கனவே பல உறுப்பினர்களிடம் வாகன வசதி உள்ளது” என்றார்.
“மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்குவதற்கு பதிலாக, பல மாதங்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என துரைமுருகன் தெரிவித்தார்.
துரைமுருகனின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

