வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை என சமூக செயற்பாட்டாளர் சாவித்திரி கண்ணன் விமர்சித்துள்ளார்.
விவசாயத்திற்கென தனி பட்ஜெட் என்ற நடைமுறையை திமுக அரசு கொண்டு வந்தது மகிழ்ச்சியளித்தாலும், வேளாண்மை குறித்த ஆழமான புரிதலும், விவசாயிகள் மீதான அக்கறையும் பட்ஜெட் தயாரிப்பில் போதுமான அளவில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயம் குறித்த புரிதலை வளர்க்க வேளாண் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் நம்மாழ்வாரின் கருத்துகள் மற்றும் நூல்களை படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி, பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி, மண்வளப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.122.51 கோடி, சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி, பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27.21 கோடி என ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டங்கள் விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காது என கூறியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை மற்றும் நிலுவைத் தொகை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்றும், சர்க்கரை ஆலைகள் மற்றும் மதுபான நிறுவனங்களின் லாபத்தை விட விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பனை பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், பனை பொருட்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளித்தால் அரசு நிதி செலவில்லாமலேயே பனை வளர்ச்சி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மண்வள பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் நிலையில், ரசாயன உரப் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கை தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டங்களை அறிவிப்பதற்கு முன், அவற்றை பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதன் பின்னர் விவசாயிகள் தானாகவே சாகுபடியை அதிகரிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
பருத்தி விவசாயம் தொடர்பாக, நியாயமான விலை கிடைக்காதது, வெளிநாட்டு இறக்குமதி, தரமற்ற விதைகள் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளுக்கு மானியம் மற்றும் சலுகைகளை வழங்குவது மட்டுமே அரசின் பணி அல்ல. விவசாயம் செய்வதற்கான உகந்த சூழலை உருவாக்குவதே அரசின் முக்கிய பொறுப்பு” என சாவித்திரி கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மேலாண்மை, விவசாய நில பாதுகாப்பு, இயற்கை சீற்றங்களில் இருந்து விளைபொருட்களை பாதுகாத்தல், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நான்கு அம்சங்களிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

