சமூக வலைதளங்களில் பிறர் தங்களை வியந்து பார்க்க வேண்டும் என்பதற்காக, தங்களது பொருளாதார நிலைக்கு மீறி ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கடன் சுமை மட்டுமின்றி, தனிப்பட்ட பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
‘லைக்’, ‘வியூஸ்’, ‘ஃபாலோயர்கள்’ எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சிலர் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு எடுப்பது, பிராண்டட் ஆடைகள், விலையுயர்ந்த கைப்பேசிகளை வாங்குவது என தங்களது வசதிக்கு மீறி செலவு செய்கின்றனர்.
மேலும், சமூக வலைதளங்களில் வசதியான வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்காக சொகுசு விடுதிகளில் தங்குவது, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றுக்கும் கடன் வாங்கிச் செலவிடுகின்றனர்.
சிலர் தங்களைப் பிரபலமாகக் காட்டிக்கொள்ள பணம் கொடுத்து போலி ஃபாலோயர்கள், லைக்குகள், பார்வைகளைப் பெறுகின்றனர். ஆனால், இணையத்தில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்கள் இருப்பது மட்டுமே ஒருவரின் உண்மையான செல்வாக்கை நிரூபிப்பதில்லை.
மற்றவர்களின் பாராட்டுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செலவுகள், நாளடைவில் குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதிக்கக்கூடும்.
சமூக வலைதளங்களில் தங்களிடம் உள்ள பணம், நகைகள், விலையுயர்ந்த பொருள்கள், வீடு உள்ளிட்ட சொத்து விவரங்களை வெளிப்படையாகப் பதிவிடுவது தனிப்பட்ட பாதுகாப்பிலும் கவனத்துடன் அணுக வேண்டிய விஷயமாகும்.
சமீபத்தில் யூடியூபர் மதுமிதா வீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் அதிக மதிப்பிலான நகை, பணக் கொள்ளை சம்பவம், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட சொத்து விவரங்களைப் பகிர்வதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கும் சமூக வலைதளப் பதிவுகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்று விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் தோன்றும் ஒவ்வொரு ஆடம்பரக் காட்சியும் அந்த நபரின் உண்மையான வாழ்க்கை நிலையை பிரதிபலிப்பதில்லை. எனவே, பிறரைப் பார்த்து தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதைத் தவிர்த்து, வருமானத்துக்கு ஏற்ற செலவு, சேமிப்பு மற்றும் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதேபோல், வீட்டு இருப்பிடம், பயணத் திட்டம், நகைகள், பணம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தேவையின்றி சமூக வலைதளங்களில் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.
சில நிமிட ‘லைக்’ மற்றும் ‘வியூஸ்’களுக்காக, வாழ்நாள் சேமிப்பையும் பாதுகாப்பையும் பணயம் வைக்க வேண்டாம் என்பதே சமூக வலைதளப் பயனர்களுக்கான முக்கிய அறிவுறுத்தலாகும்.
மதுமிதா வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

