தமிழக காவல் துறையில் 13 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை (காவல்) முதன்மைச் செயலர் கே. மணிவாசன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த கே. ஜோஷி நிர்மல் குமார், ஐபிஎஸ், சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஏ.ஜி. பாபு, ஐபிஎஸ், சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சரக டிஐஜியாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஹதிமானி, ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராகவும், லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராக இருந்த என். தேவராணி, ஐபிஎஸ், சேலம் சரக டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்.பி.யாக இருந்த வி. பத்ரி நாராயணன், ஐபிஎஸ், சென்னை அடையாறு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.சி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நுண்ணறிவுப் பிரிவு சிஐடி (NIB-CID) எஸ்.பி.யாக இருந்த என். மதிவாணன், பரங்கிமலை காவல் துணை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த வி.ஆர். சீனிவாசன், ஐபிஎஸ், NIB-CID எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாக இருந்த கே. ஸ்டாலின், சென்னை சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த பி. சுந்தரவடிவேல், ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த டாக்டர் வி. பாஸ்கரன், ஐபிஎஸ், சேலம் வடக்கு துணை ஆணையராகவும், சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

