பெண் செய்திவாசிப்பாளர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சன் டிவி செய்திப் பிரிவில் பணியாற்றும் பெண் செய்திவாசிப்பாளர் குறித்து யூடியூப் நேர்காணல் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும் வரை அவருக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

