“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய வாழ்வியல் அறிவாகவும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அந்த நீரை எங்கே, எப்படி அமைத்து வைக்க வேண்டும்? என்பதுதான் இன்றைய மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
மலைப்பகுதிகளில் இருந்து கடலை நோக்கி ஓடும் மழைநீரை அப்படியே கடலுக்குச் செல்லவிடாமல், நிலத்தில் தேக்கி வைப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.
இதற்காக வரப்புகளை உயர்த்துதல், நிலத்தை உழுதல், மழைநீரை நிலத்திற்குள் ஊடுருவச் செய்தல் போன்ற இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீர் நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் சேமிக்கப்படுகிறது.
நீர் நிலத்திற்குள் செல்லும்போது, நிலத்தடி ஈரப்பதம் அதிகரிக்கிறது. நிலத்திற்குள் வாழும் பல்வேறு உயிரினங்களுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாகிறது. அதேபோல், நிலத்தின் வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சமநிலையில் வைத்திருக்க நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நிலத்தின் மேற்பரப்பில் நீர் தேங்கி நிற்கும்போது, சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்பத்தின் தாக்கமும் ஓரளவு சமநிலைப்படுத்தப்படுகிறது. நீர் மற்றும் ஈரப்பதம் இல்லாத நிலப்பகுதிகள் பாலைவனமாகவோ, பனிப்பிரதேசங்களைப் போல உயிரினங்கள் வாழ்வதற்கு கடினமான சூழலாகவோ மாறக்கூடும்.
மழை பெய்தாலும் அந்த நீர் நிலத்தில் தங்காமல் வேகமாக கடலை நோக்கி ஓடிவிட்டால், நிலம் தனது ஈரப்பதத்தை இழக்கிறது. விதைகள் முளைப்பதும், தாவரங்கள் வளர்வதும், உயிரினங்கள் வாழ்வதும் பாதிக்கப்படுகிறது.
எனவே, மழைநீருக்கு ஒரு “அமைவிடம்” உருவாக்குவது அவசியம். அந்த அமைவிடத்தை உருவாக்குவதில் வரப்புகள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் இயற்கை முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
“நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் வரியை, “நீரை வீணாக்காமல் அதற்கான அமைவிடத்தை உருவாக்கு” என்ற செய்முறை அறிவுரையாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, நீர்ப்பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டக் குறைவு போன்ற பிரச்னைகளுக்கு இயற்கையை அழிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது. மாறாக, இயற்கையின் நீர்ச் சுழற்சியைப் பாதுகாத்து, மழைநீரை நிலத்தில் தக்க வைப்பதே நீண்டகாலத் தீர்வாக அமையும்.
நீரைத் தேக்கி வைப்போம்…
நிலத்தை ஈரமாக்குவோம்…
உயிர்களைப் பாதுகாப்போம்…
பூமியைப் பாதுகாப்போம்.
“நீரின்றி அமையாது உலகு” — இது ஒரு குறள் மட்டுமல்ல; செயல்படுத்த வேண்டிய வாழ்வியல் அறிவு.

