தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நிர்வாக காரணங்களுக்காக 12 கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் எம். ஆசியா மரியம், ஐ.ஏ.எஸ்., ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சென்னை, வேலூர், பூந்தமல்லி, கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மண்டலங்களில் பணியாற்றி வந்த அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை வக்பு மண்டல கண்காணிப்பாளர் சையத் ஜபீர், அரசு தொடர்பு, உலமா ஓய்வூதியம், பதிவுத்துறை உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகளை கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மண்டல கண்காணிப்பாளர் அயிஷா, தகவல் அறியும் உரிமை, சட்டப்பிரிவு உள்ளிட்ட பணிகளை கவனிக்க உள்ளார். தஞ்சாவூர் மற்றும் மதுரை மண்டலங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த எஸ். காதர் ஷெரீப், மதுரை மண்டல கண்காணிப்பாளராகவும், திருச்சி மண்டலத்தை கூடுதல் பொறுப்பாகவும் கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏ. ஜாகீர் ஹுசைன் சென்னை மண்டல கண்காணிப்பாளராகவும், ஹெச். ஷகீரா பானு பூந்தமல்லி மண்டல கண்காணிப்பாளராகவும், முகமது ஷபியுல்லா சேலம் மண்டல கண்காணிப்பாளராகவும், ஹைதர் அலி கோவை மண்டல கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ். அப்துல்லா கடலூர் மண்டல கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், தஞ்சாவூர் மண்டலத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகமது ஆலம் வேலூர் மண்டல கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களது தற்போதைய பொறுப்புகள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து, புதிய பணியிடங்களில் உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

