அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் தொண்டு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் இருந்து வந்த மாநில நிர்வாகிகளுடன் ஜெகநாத் மிஸ்ரா கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் தொண்டு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக பெண்கள், ஏழை-எளியோர் மற்றும் உதவி தேவைப்படுவோரின் முன்னேற்றத்துக்காக தொண்டு நிறுவனங்களும், மகளிர் சுயஉதவிக் குழுக்களும் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நலன், வளர்ச்சி தொடர்பான கோரிக்கை மனுக்கள் ஜெகநாத் மிஸ்ராவிடம் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து, சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர் கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. மனோகரன், மாநில பொதுச் செயலர் வி.ஆர். ராஜன், மாநிலச் செயலர் ஆர். அருள் கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

