முதல்வருக்கு சுப. உதயகுமார் கோரிக்கை
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது நிலுவையில் உள்ள 55 வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீக்கியிருப்பதை வரவேற்று பாராட்டுகிறோம். இதேபோல், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 2011 முதல் 2014 வரை நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் நீக்க வேண்டும்.
அந்த போராட்டத்தின் போது போராடிய மக்கள் மீது மொத்தம் 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற பரிந்துரை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் பெரும்பாலான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
ஆனால், மீதமுள்ள வழக்குகளை நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் முந்தைய அதிமுக, திமுக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 26 வழக்குகளை மட்டுமே திரும்பப் பெற்றது.
தற்போது போராடிய மக்கள் மீது 53 வழக்குகள் 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான என்மீது ஒரு சிபிசிஐடி வழக்கும், ஒரு ஊபா (UAPA) வழக்கும் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளால் கடலோர மற்றும் உள்பகுதி மக்கள் கடவுச்சீட்டு பெற முடியாமல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் காவல்துறை தடையின்மைச் சான்றிதழ் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, தமிழக அரசு உடனடியாக 55 வழக்குகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

