வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு டீ, காபி, உணவுகளின் விலை உயர்ந்த நிலையில், தற்போது சர்க்கரை விலை அதிகரித்து வருவதால் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா போரால், சில மாதங்களுக்கு முன்பு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்ததோடு, கிடைப்பதும் பெரிய விஷயமாக இருந்தது. இதனால், பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறின. அத்துடன் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தன. குறிப்பாக அன்றாடம் நாம் பருகும் டீ, காபி விலையும் உயர்த்தப்பட்டது.
நகரங்களில் ரூ.12க்கு விற்கப்பட்ட டீ ஒன்று ரூ.15 ஆனது; காபி விலை ரூ.20 ஆக உயர்தது. கிராமப்புறங்களில் டீ விலை 2- 3 ரூபாய் வரை அதிகரித்ததால், டீ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமையல் எரிவாயு தட்டுப்பாடு இப்போது இல்லாதபோதும், உயர்த்தப்பட்ட டீ, காபி, உணவுப் பொருட்களின் விலை இறங்கவில்லை.
இந்த நிலையில், தற்போது சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 1 கிலோ சர்க்கரை விலை ரூ.45, ரூ.50 என்று விற்கப்பட்டு வந்தது. சமீப நாட்களில் இதன் விலை ரூ.65, ரூ.75 என அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது; அவர்களின் பட்ஜெட்டில் துண்டு விழச் செய்துள்ளது.
சர்க்கரைக்கான விலை உயர்வுக்கு, மத்திய அரசு எத்தனால் பெட்ரோல் அறிமுகம் செய்து, அதன் காரணமாக சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக, ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் மத்திய அரசு இதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. ஆனால் மத்திய அரசோ இதை மறுக்கிறது.
உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, உள் நாட்டில் பதுக்கல் உள்ளிட்ட காரணங்களால் தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்கிறது. அத்துடன், உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதால், சர்க்கரை இருப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை, மத்திய அரசு வரியின்றி இறக்குமதி செய்கிறது.
இதுவொருபுறம் இருக்க, சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மீண்டும் டீ, காபி விலை ரூ20, ரூ25 என உயத்துவது பற்றி, கடை உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். அதேபோல், பலகாரக் கடைகளில் இனிப்பு ரகங்களில் விலையும் கணிசமாக உயரும் என்று தெரிகிறது. சர்க்கரை விலை உயர்வு, அதன் காரணமாக டீ, காபி விலை உயரும் என்ற தகவல் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

